சட்டசபைத் தேர்தல்களில் மக்கள் அபரிமிதமான ஊக்கத்தில் இருப்பதால் தீபாவளிக்குக் கதரை மறந்து விடுவார்களோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார் கட்சியினால் ஏற்படும் நன்மைகளைவிட, பதின் மடங்கு நிரந்தரமான நன்மைகள், கதரினால் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூகமாகிய ஏழைச் சகோதரி சகோதரர்களுக்கு ஏற்படும் என்பதை மறவாதீர்கள். ஏழைகளுக்கு கஞ்சி வார்க்காமல் என்ன சுதந்திரமோ, சுயராஜ்யமோ பெற்றாலும் அது உண்மையான சுயராஜ்யமாகாது. பார்ப்பனரல்லாத சகோதரர்கள் ஒவ்வொருவரும் சுயநலத்தை உத்தேசித்து அல்லாமல் உண்மையாய்ப் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்களாயிருந்தால், கதரின் மூலமாகத்தான் வெளியாகும். கதரை மதிக்காத பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயிப்பதும், பார்ப்பனரல்லாதாரை அழுத்தப் புறப்பட்ட காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி ஜெயிப்பதும் ஒன்றுதான். ஆதலால் கலியாண சந்தடியில் தாலி கட்டுவதை மறந்தது போல் தேர்தல் தடபுடலில் கதரை மறந்து விடாதீர்கள்.
குடி அரசு - சிறு குறிப்பு - 31.10.1926